கர்நாடகத்தில் 25 மேல்-சபை தொகுதிகளுக்கு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 25 மேல்-சபை தொகுதிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-11-15 21:20 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் காலியாக உள்ள 25 மேல்-சபை தொகுதிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்  வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. 

மேல்-சபை தேர்தல்

கர்நாடகத்தில் சட்டசபையும், சட்ட மேல்-சபையும் உள்ளது. இதில் சட்ட மேல்-சபையில் 75 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 25 உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்களித்து தேர்வு செய்யப்படுகிறார்கள். 
அதன்படி தேர்வு செய்யப்பட்ட 25 தொகுதிகளின் உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அந்த பீதர், கலபுரகி, விஜயாப்புரா-2, பெலகாவி-2, உத்தரகன்னடா, தார்வார்-2, ராய்ச்சூர், பல்லாரி, சித்ரதுர்கா, சிவமொக்கா, தட்சிண கன்னடா-2, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, மண்டியா, பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், குடகு மற்றும் மைசூரு-2 என மொத்தம் 25 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 16-ந் தேதி (இன்று) தொடங்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

இந்த தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 98 ஆயிரத்து 845 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையும் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி மேல்-சபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வருகிற 23-ந் தேதி வரை மனுதாக்கல் நடக்கிறது. 24-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 26-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். 

கொரோனா தடுப்பு விதிகள்

ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த ஓரிரு நாளில் அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அதாவது வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது உடன் 2 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கலின்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசத்தை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பெற பா.ஜனதா திட்டம்

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்த ஆளும் பா.ஜனதா, இந்த மேல்-சபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் அதிக இடங்களில் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. 

ஜனதா தளம் (எஸ்) கட்சி தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 8 தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. தற்போது மேல்-சபையில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில், ஆளும் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்