டாஸ்மாக் கடையை 2 நாளில் இடமாற்ற வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் கடையை 2 நாளில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-11-15 21:03 GMT
மதுரை
டாஸ்மாக் கடையை 2 நாளில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
டாஸ்மாக் கடையால் மக்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்றத்தலைவி கிருபா, மதுரை ஐகோர்ட்டில தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
மெஞ்ஞானபுரம் பஸ் நிலையம் அருகில் பஜாரின் மையப்பகுதியில் டாஸ்மாக கடை இயங்கி வருகிறது. இந்தக்கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினசரி பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மது அருந்துபவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திருச்செந்தூர் தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில், மெஞ்ஞானபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை 6 மாதத்திற்குள் இடமாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை கடையை இடமாற்றம் செய்யவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அவகாசம் தர மறுப்பு
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கால அவகாசம் கோரினார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். 
பின்னர், “ஒரு கடையை இடமாற்றம் செய்ய எவ்வளவு கால அவகாசம் எடுப்பீர்கள். ஏற்கனவே கடையை அகற்றுவதாக உறுதியளித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதற்கு மேல் கால அவகாசம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மதுபானக்கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் பெரிய இழப்பு வந்துவிடாது” என்று கருத்து தெரிவித்தனர்.
2 நாளில் அகற்ற உத்தரவு
விசாரணை முடிவில், 2 நாட்களுக்குள் மனுதாரர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாற்றவில்லை என்றால், கடையை தற்காலிகமாக மூடிவிட வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை நாளை (17-ந்தேதிக்கு) ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்