மத்தியபிரதேச வாலிபர் குத்திக்கொலை; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் மத்தியபிரதேச வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 5 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் மத்தியபிரதேச வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 5 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடிபோதையில் தகராறு
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பூபத்சிங் (வயது 25). இவர், பெங்களூரு பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூ பையப்பனஹள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கட்டிடத்தின் அருகேயே ஷெட் அமைத்து பூபத்சிங் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் தனது நண்பர்களுடன் நியூ பையப்பனஹள்ளி அருகே உள்ள ஓட்டலுக்கு பூபத்சிங் சாப்பிட சென்றார்.
அவ்வாறு செல்லும் வழியில் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் நின்ற 5 மர்மநபர்களுக்கும், பூபத்சிங், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. உடனே அங்கிருந்து பூபத்சிங்கை, அவரது நண்பர்கள் அழைத்து சென்றார்கள். பின்னர் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு பூபத்சிங், அவரது நண்பர்கள் கட்டிடத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.
வாலிபர் குத்திக் கொலை
இந்த நிலையில், ஏற்கனவே தகராறு செய்த அதே கும்பலினர் பூபத்சிங்கை வழிமறித்து மீண்டும் தகராறு செய்தார்கள். அப்போது திடீரென்று அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூபத்சிங்கை சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டனர்.
இதில், பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபத்சிங்கை, அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பையப்பனஹள்ளி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பூபத்சிங்குக்கும், 5 நபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், அந்த முன்விரோதம் காரணமாக கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 5 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.