மாடு மேய்த்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
மாடு மேய்த்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
குன்னம்:
தாலிச்சங்கிலி பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஜெயலட்சுமி(வயது 36). இவர் நேற்று மாலை குன்னம் மூங்கில்பாடி சாலையில் உள்ள நத்தை ஏரிக்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி உடனடியாக சுதாரித்துக்கொண்டு, அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
பின்னர் இது குறித்து ஜெயலட்சுமி குன்னம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.