பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் 1-வது வார்டு மேற்கு வ.உ.சி. தெருவில் செல்வ விநாயகர், மகாசக்தி மாரியம்மன், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் புணரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி முதற்கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.
நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, கடம் புறப்பாடானது. அதைத்தொடர்ந்து குருக்கள் புனித நீரை விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்து, தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மகாசக்தி மாரியம்மன், செல்வ விநாயகர், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சாமி புறப்பாடு நடந்தது.