ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் எச்.ராஜா ஆஜர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் எச்.ராஜா ஆஜர் ஆனார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாக சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் அரிகரன் விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சம்மனை பெற்றுக்கொண்டு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால், ஸ்ரீவில்லிபுத்தூரில், அரசியல்வாதிகளுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி பரம்வீர் கடந்த மாதம் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதன்பின்னர் கடந்த 27-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். ஆனால், கடந்த 27-ந் தேதியும் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா, கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் நீதிபதி பரம்வீர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், பெரிய பெருமாள் கோவிலில் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜரையும் சந்தித்தார்.