தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு 2 வது நாளாக வெடி வைத்து தகர்ப்பு
தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு 2 வது நாளாக வெடிவைத்து தகர்க்கப்பட்டது
விழுப்புரம்
தளவானூர் அணைக்கட்டு
விழுப்புரம் மாவட்டம் தளவானூருக்கும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலத்திற்கும் இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு கட்டப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எனதிரிமங்கலத்தில் உள்ள அணையின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 3 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. கடந்த 9-ந் தேதி தளவானூர் அணைக்கட்டின் கரைப்பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டு 3 மதகுகளும் சேதமடைந்தன. அணைக்கட்டு கட்டிய ஓராண்டிலேயே இருபுறமும் உள்ள மதகுகள் உடைந்து சேதமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்
அணைக்கட்டுக்கு நீர் அதிகமாக வந்ததால் மண் அரிப்பும் ஏற்பட்டது. இதனால் ஆற்று தண்ணீர் தளவானூர் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதை தடுத்து நிறுத்தும் வகையில் அணைக்கட்டின் 3 மதகுகள் மற்றும் இடதுபுற கரைப்பகுதியை வெடி வைத்து தகர்க்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் எறையூரை சேர்ந்த வெடி வைக்கும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அணைக்கட்டின் சேதமடைந்த பகுதிகளில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் ஆகியவற்றை வைத்து வெடிக்க செய்தனர். ஆனால் அணைக்கட்டின் மதகுகள், கரைப்பகுதி முற்றிலும் தகர்க்கப்படாமல் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் சாய்ந்தவாறே இருந்தது. இரவு நேரம் ஆகிவிட்டதால் அணைக்கட்டை தகர்க்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.
2-வது நாளாக வெடி வைப்பு
இதனை தொடh;ந்து அணைக்கட்டின் 3 மதகுகள் மற்றும் கரைப்பகுதியை வெடி வைத்துதகர்க்கும் பணி 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக அணைக்கட்டு பகுதிக்கு வரும் தண்ணீரின் வேகத்தை குறைக்கும் வகையில் அந்த வழியாக செல்லும் தண்ணீரை கடலூர் எனதிரிமங்கலம் அணைக்கட்டு பகுதியில் பள்ளம் தோண்டி அவ்வழியாக நேரடியாக கடலுக்கு செல்லும்படி வழிவகை செய்தனர்.
தண்ணீரின் வேகம் சற்று குறைந்ததையடுத்து சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடி வைக்கும் தொழிலாளர்கள் 20 பேர் அணைக்கட்டின் சேதமடைந்த பகுதியிலும் மற்றும் 3 மதகுகள் அமைந்துள்ள பகுதியிலும் பவர் டிரில்லிங் மிஷின் மூலம் துளையிட்டனர். அதுபோல் ஏற்கனவே வெடி வைக்கப்பட்டதன் மூலம் விரிசல் ஏற்பட்ட இடங்களிலும் இன்னும் பெரிய அளவில் துளையிட்டனர். இவ்வாறாக அணைக்கட்டின் சேதமடைந்த பகுதியில் 47 இடங்களில் துளையிட்டு அதில் முந்தைய தினத்தைவிட சக்தி வாய்ந்த 47 ஜெலட்டின் குச்சிகள், 300 டெட்டனேட்டர்களை வைத்தனர்.
பெரும்பகுதி தகர்க்கப்பட்டது
பின்னர் மாலை 3.50 மணிக்கு வெடியை வெடிக்க வைத்து அணைக்கட்டு தகர்க்கப்பட்டது. அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. இதில் அணைக்கட்டின் 3 மதகுகள் உள்ள மேற்புறம் மற்றும் மதகுகளின் கதவுகள் முற்றிலும் உடைந்து சுக்குநூறாகியது. அணைக்கட்டின் கீழ்புறத்தில் உள்ள மதகு பகுதி மற்றும் தடுப்புச்சுவர்கள் மட்டும் உடைந்து விழாமல் அப்படியே இருந்தது. அணைக்கட்டின் சேதமடைந்த பகுதி 70 சதவீதம் தகர்க்கப்பட்டதாகவும், மீதமுள்ள பகுதிகள் நாளை (அதாவது இன்று) காலை கிரேன் மூலம் முழுவதுமாக அகற்றப்படும். இதற்காக ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், 2 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது கரைப்பகுதியின் வழியாக தண்ணீர் செல்வது குறைந்து அணைக்கட்டின் சேதமடைந்த பகுதி வழியாக நீர் நேராக செல்ல தொடங்கியுள்ளது. அணைக்கட்டின் சேதமடைந்த பகுதி முழுவதையும் அகற்றிய பிறகு நீர் நேராக கடலுக்கு செல்லும். ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் உடைந்த கரைப்பகுதி, கருங்கற்கள் கொண்டும், மணலை கொண்டும் தற்காலிகமாக சீரமைக்கப்படும் என்றனர்.