கடலூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

கடலூரில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-15 17:22 GMT
கடலூர், 

போலீஸ்காரர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பூபதி மகன் பிரபாகரன் (வயது 33). இவர் கடலூர் ஆயுதப்படை பிரிவில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஷ்ணுப் பிரியா என்ற மனைவியும், எழிலவன், தமிழ்மதி என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பிரபாகரன் குடும்பத்துடன் தற்போது கடலூர் ஆனைக்குப்பத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் பிரபாகரனுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு உடல்நிலை சீராகவில்லை.

தூக்கில் தொங்கினார்

நேற்று பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதற்கிடையில் நிகழ்ச்சி முடிந்து அவரது மனைவி விஷ்ணுப்பிரியா மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஷ்ணுப்பிரியா மற்றும் அவரது உறவினர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ள சக போலீசார் வந்து, தூக்கில் தொங்கியபடி கிடந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது மனைவி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த சக போலீசார் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து இறந்த பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது பற்றி அவரது மனைவி விஷ்ணுப்பிரியா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரன் உடல் நிலை பாதிப்பால்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்