தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-15 17:01 GMT
அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

வேலூர் அலமேலுமங்காபுரம் ஏரியூர் கிராமத்தில் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். ஏரியூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்படுவது இல்லை. மருத்துவமனைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள் அரசு டவுன் பஸ்களையே நம்பி உள்ளனர். ஆனால் அரசு டவுன் பஸ்கள், நிறுத்தத்தில் நிற்காமல் போவதால் அனைவரும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட பணிமனை மேலாளர் நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ்கள் ஏரியூரில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.
-கே.உமாசங்கர், ஏரியூர்.
மேம்பாலம் கட்டித்தர வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரி மிகப் பெரிய ஏரியாகும். அந்த ஏரி நிரம்பி உபரிநீர் கால்வாய் மூலம் வெளியேறுகிறது. தண்ணீர் வெளிேயறும் கால்வாயில் உத்திரம்பட்டு கிராமத்தில் உள்ள தரைப்பாலம், காவேரிப்பாக்கத்தில் இருந்து துரைபெரும்பாக்கம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம், ஆலப்பாக்கத்தில் இருந்து பனப்பாக்கம் செல்லும் வழியில் கலப்பலாம்பட்டு கிராமத்தில் உள்ள தரைப்பாலம் ஆகியவை நீரில் மூழ்கி உள்ளன. கிராம மக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள் பனப்பாக்கம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு கால்வாயை கடந்து செல்ல முடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட 3 இடங்களில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக கட்டித்தர வேண்டும் 
-இளங்கோவன், ஆலப்பாக்கம்.
நூலகங்கள் திறக்கப்படுமா?

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அதில் வெறையூர், தச்சம்பட்டு, சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, விருது விளங்கினான், சு.வாழாவெட்டி ஆகிய கிராமங்களில் அதிகளவில் படித்த முதியவர்கள், பட்டதாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளனர். ஒவ்வொரு கிராமங்களில் நூலகம் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டன. தினமும் செய்தித்தாள்களும் வைக்கப்பட்டன. நூலகத்துக்கு அனைவரும் வந்து படித்துச் சென்றார்கள். தற்போது நூலகங்கள் பூட்டி கிடக்கின்றன. அதன் எதிரே கால்நடைகள் கட்டப்படுகின்றன. அனைத்து நூலகங்களையும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சுப்பிரமணியம், தச்சம்பட்டு.

மேலும் செய்திகள்