‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாலையில் சாய்ந்த மரம் அகற்றப்படுமா?
திண்டுக்கல் 16-வது வார்டு அபிராமி குப்பத்தில் இருந்து ரெங்கநாயகிநகருக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மரம் சாய்ந்து விழுந்து விட்டது. ஆனால் இதுவரை அந்த மரம் அகற்றப்படவில்லை. அந்த மரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அவசர தேவைக்கு கூட வாகனங்கள் வர முடியவில்லை. எனவே மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
சேதமடைந்த சாலை
நத்தத்தில் இருந்து செந்துறை செல்லும் சாலையில் பாப்பாபட்டி விலக்கு வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மழை பெய்தால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி இதர வாகனங்களும் செல்ல முடியவில்லை. எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி நடராஜன், நத்தம்.
தொற்று நோய் பரவும் அபாயம்
ஆண்டிப்பட்டி தாலுகா ராஜகோபாலன்பட்டி ஊராட்சி 1-வது வார்டு சக்கம்பட்டி ஜே.ஜே.நகரில் கழிவுநீர் உறிஞ்சிகுழி நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து ஓடுவதோடு நடைபாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதுரைவீரன், சக்கம்பட்டி.
அபாய மின்கம்பம்
வடமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகே வாகன நிறுத்துமிடம் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. கனமழை பெய்யும் போது மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-சுமித், வடமதுரை.