ரேஷன் கடை ஊழியர் வீட்டில் செல்போன் திருட்டு

தேனி அருகே ரேஷன் கடை ஊழியர் வீட்டில் புகுந்து செல்போன் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-15 14:12 GMT
தேனி: 

தேனியை அடுத்த அன்னஞ்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). ரேஷன் கடை ஊழியர். இவர், வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கணேசன் தனது செல்போனை வீட்டின் ஒரு அறையில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். 

அப்போது கடையின் பூட்டை உடைத்து அதன் வழியாக கணேசன் வீட்டுக்குள் சிறுவன் ஒருவன் உள்ளே புகுந்தான். அவன் வீட்டில் இருந்த கணேசனின் செல்போனை திருடிக்கொண்டு தப்பியோடினான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டனர். 

அதை கேட்டு வீட்டில் இருந்த கணேசன் வெளியே வந்து அந்த சிறுவனை விரட்டி பிடித்தார். பின்னர் அவனை அல்லிநகரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த உச்சம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவனிடம் இருந்த 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தார். 

மேலும் செய்திகள்