ரெயில் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் 144 ரெயில் நிலையங்களில் ‘குழந்தைகள் உதவி மையம்’ தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ‘குழந்தைகள் உதவி மைய நட்புறவு வாரமாக’ கடைப்பிடிக்கப்படும்.
அந்தவகையில் குழந்தைகள் தினமான நேற்று சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது, பயணிகளிடையே குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, ‘இதுவரை சென்டிரல் ரெயில் நிலையத்தில், குழந்தைகள் உதவி மையம் மூலம் 4 ஆயிரத்து 500 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்’ என்றார்.
இதேபோல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை கோட்ட மேலாளர் கலந்து கொண்டார். அப்போது ரெயில் பயணிகளிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ரெயில்வே குழந்தைகள் உதவி மைய உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.