‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீடுகள் முன்பு குப்பைகள் தேக்கம்
சென்னை கொட்டிவாக்கம் கிளை மின்நிலையம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள ஒப்பந்ததாரர் தினந்தோறும் குப்பைகளை வீடுகளுக்கு வந்து சேகரிப்பது இல்லை. மழைவிட்ட பிறகும் குப்பைகளை சேகரிக்காததால் வீடுகளில் குப்பைகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. ஒவ்வொரு வீட்டின் முன்பு குப்பைகள் தேங்கி குப்பைத்தொட்டி போன்று உள்ளது. எனவே ஒப்பந்ததாரர் தினமும் தவறாமல் வீடுகளுக்கு வந்து குப்பைகளை எடுத்து செல்ல வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
- வி.சந்திரசேகரன், திருவான்மியூர்.
ஆபத்தான மின்கம்பம்
சென்னையை அடுத்த நங்கநல்லூர் ரகுபதி நகரில் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் அருகில் உள்ள மரங்களின் மீது சாய்ந்திருக்கிறது. இது எப்போது சாய்ந்து தரையில் விழுப்போகிறதோ? என்று பயமாக இருக்கிறது. இதனால் இத்தெரு வழியாக செல்வோர் அச்சத்துடனேயே செல்ல வேண்டியதாக இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மூலம் அபாயகரமான அந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பொதுமக்கள், நங்கநல்லூர்.
கழிவுநீர் கால்வாயில் அடைப்பு
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரன் நகர் 2-வது மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு பிரச்சினை நிலவுகிறது. பலர் நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. துர்நாற்றம் அதிகமாக இருப்பதால், இப்பகுதியை கடந்தாலே மூக்கை பிடித்து செல்லவேண்டி இருக்கிறது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஏ.ஜி.சார்லஸ், வேளச்சேரி.
குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுமா?
சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் மெயின் ரோட்டில் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் அப்பகுதி அசுத்தமாகவே காட்சி தருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் ராட்சத குப்பை தொட்டிகள் வைக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
- பொதுமக்கள், அயனாவரம்.
தெருவை சூழ்ந்த கழிவுநீர்
சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் நேதாஜி தெருவில் மழைநீர் வடிந்தாலும், கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த தெருவே சாக்கடை போன்று காட்சி அளிக்கிறது. துர்நாற்றமும் பலமாக வீசுகிறது. இதன் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், நேதாஜி தெரு.
மின்கம்பம் சேதம்
ஆவடி மாநகராட்சி ஆனந்த நகர் கூட்டணி தெருவில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
-ஆனந்த நகர் மக்கள்.
பயன்பாடு இன்றி சமூக நலக்கூடம்
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் கிராமம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் பயன்பாடு இல்லாமல் தொடர்ந்து மூடியே கிடக்கிறது. இந்த கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி கிடக்கிறது.
மக்கள் வரி பணம் வீரயமாக்க கூடாது. எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், அன்னை அஞ்சுகம் நகர்.
இன்னும் வடியாத மழைநீர்
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பூம்புகார் நகரில் தேங்கிய மழைவெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. குடியிருப்புகளை சுற்றி 4 பக்கமும் வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவு போன்று காட்சி அளிக்கிறது. இதனால் மிகுந்த இன்னல்களை அனுபவிக்கிறோம். மழை நின்றாலும் இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. எனவே இப்பகுதியில் மின் மோட்டார்களை பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், பூம்புகார் நகர்.
சுகாதார சீர்கேடு
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி சக்தி நகரில் சிலர் தங்களது வீடுகள் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை நேரடியாக தெருக்களில் விடுகின்றனர். இதனால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ?
- பொதுமக்கள், சக்தி நகர்.
ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை
திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு முதல் நிலை ஊராட்சியில் அமைந்துள்ள கன்னியம்பாளையம் கிராமத்தில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் பாழடைந்து உடைந்து உள்ளது. நிழற்குடையின் தூண்கள் விரிசலடைந்து அருகில் உள்ள கொடி கல்வெட்டு மீது சாய்ந்து தாங்கிய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நேரிடும் முன்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஜனார்த்தனன், கன்னியம்பாளையம்
தெருவிளக்குகள் எரியவில்லை
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் வீரமாகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள 2 தெரு மின்விளக்குகள் கடந்த ஒரு மாத காலமாக எரியாமல் உள்ளது. அந்த இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்லும் நிலைமை உள்ளது.
- பொது மக்கள், பிள்ளையார்பாளையம்.
நாய்கள் தொல்லை
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு சீனிவாசா நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகளால் தெருவில் நிம்மதியாக விளையாட முடிவதில்லை. முதியோர்களும் அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை உள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
-அ.கிறிஸ்டோபர், மாங்காடு.