பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கார்களில் கடத்த முயன்ற ரூ2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 4 பேர் கைது

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கார்களில் கடத்த முயன்ற ரூ2¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-15 05:17 GMT
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கார்களில் கடத்த முயன்ற ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன ேசாதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சென்னையை சேர்ந்த மதுகர் ரகுமான் (வயது38), ரகமத் அலி (36) என்பதும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அதேபோல், நேற்று பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
அப்போது அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த அசோக் சிங் (26), ராம் சிங் (22) என்பதும், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் துணிக்கடை நடத்தி வருவதும், பெங்களூருவில் இருந்து அவினாசிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்