ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி; 250 மாணவ -மாணவிகள் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் 250 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி ஈரோடு கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட சதுரங்க சர்கிள் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கொங்கு கல்வி நிலைய பள்ளிக்கூட தாளாளர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் 9 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் தொழில் அதிபர்கள் இளங்கோ, சுந்தர்ராஜ், அகில உலக ஜோதிட சங்க தலைவர் ஓம் உலகநாதன், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ரூபா குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.
விழாவில் ஈரோடு தாலுகா செஸ் அசோசியேசன் செயலாளர் கராத்தே நாவலன் மற்றும் மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.