பட்டாசு வெடித்ததால் பந்தல் தீப்பிடித்து எரிந்து நாசம்
பட்டாசு வெடித்ததால் பந்தல் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
திருச்சி:
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ரெயில்வே சொசைட்டி திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரு திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மணமக்கள் வீட்டார் வானம் நோக்கி சென்று தொடர்ச்சியாக வெடிக்கும் பேன்சி ரக பட்டாசுகளை வெடித்தனர். அப்போது ஒரு வெடியில் இருந்து தீப்பொறி பறந்து மண்டபத்தின் பக்கவாட்டில் போடப்பட்டு இருந்த துணி பந்தல் மீது விழுந்தது. இதில் துணி பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த மண்டப ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்த தீயணைப்பான் உதவியுடனும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் பந்தல் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.