மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-14 20:26 GMT
ஈரோடு
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் திறப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியை எட்டியது.
இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 24 ஆயிரம் கனஅடி காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதேபோல் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் அங்கிருந்தும் உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
தண்டோரா மூலம் எச்சரிக்கை
இந்த உபரிநீர் பவானி கூடுதுறை வழியாக வந்து காவிரி ஆற்றில் கலப்பதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான ஈரோடு கருங்கல்பாளையம், நெரிஞ்சிப்பேட்டை, பவானி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வகிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஈரோடு வருவாய்துறை சார்பில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்