பவானியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பவானியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி
பவானி அந்தியூர் பிரிவு அருகே உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வட்ட வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் பவானி வட்ட வழங்கல் துறை அதிகாரி ராவுத்தர், தேர்தல் தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் சாக்குப்பைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி ராணி ஆகியோர், தேர் வீதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததும்,’ தெரியவந்தது. இதையடுத்து 250 கிலோ ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.