கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
தாயில்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் தஞ்சாவூர் சேர்வவிடுதி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 26) என்பவர் தனது குடும்பத்தினருடன் தோட்ட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது கிணற்று அருகே சென்றபோது தடுமாறி கிணற்றில் விழுந்தார். அப்போது அவர் சத்தம் போட்டார். அவருடைய சத்தத்ைத கேட்ட மகேந்திரனின் தந்தை சுப்பிரமணி மற்றும் தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் கிணற்றில் விழுந்த அவரை காப்பாற்ற முயன்றனர். இதுகுறித்து உடனடியாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி மகேந்திரனின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகேந்திரன் மனைவி சினேகா (20) வெம்பக்கோட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.