அரிமளம் தாசில்தாரை தாக்கி 1,500 கிலோ ரேஷன் அரிசி காருடன் கடத்தல் தப்பியோடிய வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தாசில்தாரை தாக்கிவிட்டு குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்த 1,500 கிலோ ரேஷன் அரிசி காருடன் கடத்தி சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரிமளம்:
1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், வாளரமாணிக்கம் கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு சிறப்பு தாசில்தார் ரமேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வாளரமாணிக்கம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு காரில் ரேஷன் அரிசி 1,500 கிலோ ஏற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் ரமேஷ் மற்றும் தாசில்தார் ஜீப் டிரைவர் கலியபெருமாள் ஆகியோர் அந்த 1500 கிலோ ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்து புதுக்கோட்டைக்கு கொண்டு சென்றனர்.
வலைவீச்சு
வன்னியம்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த வாலிபர்கள் காரை மறித்து தாசில்தார் மற்றும் டிரைவர் கலியபெருமாள் ஆகியோரை கீழே தள்ளி விட்டு, ரேஷன் அரிசி உடன் காரை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.