கமண்டல நாகநதி ஆற்றில் தரைப்பாலங்கள் மூழ்கி 25 மலை கிராமங்கள் துண்டிப்பு
ஜவ்வாதுமலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கமண்டலநாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 25 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அடுக்கம்பாறை
ஜவ்வாதுமலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கமண்டலநாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 25 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பலத்த மழை
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஜவ்வாது மலைத்தொடரில் பெய்த கனமழையின் காரணமாக வேலூர் அமிர்தி மிருகக்காட்சி சாலையில் அமைந்துள்ள கொட்டாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியத்துக்கு மேல் திடீரென 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொட்டித்தீர்த்த கனமழையால் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமிர்தி மிருகக்காட்சிசாலை அருகிலுள்ள 2 தரைப்பாலங்களும் நீரில் மூழ்கி தரைப்பாலத்தின் மீது 3 அடிக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஜவ்வாது மலைத்தொடரிலுள்ள 25-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன,
தடைவிதிப்பு
பாலத்தின் மீது செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தரை பாலத்தை கடக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல் சிங்கிரிகோவில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப் பாலமும் நீரில் மூழ்கியது. மேலும் சிங்கிரிகோவில் அருகே 2 ஆடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றில் குளிப்பது, விளையாடுவது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அமிர்தி வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.