நெல்லிக்குப்பம் அருகே சோகம் தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாணவர் உள்பட 2 பேர் பலி மாயமான வாலிபரை தேடும் பணி தீவிரம்

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-14 17:24 GMT
நெல்லிக்குப்பம், 

ஆற்றில் மூழ்கினர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் அழகியநத்தம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் குளித்தனர். 
அப்போது முள்ளிகிராம்பட்டை சேர்ந்த முத்துலிங்கம் மகன் லோகேஸ்வரன் (வயது 16) என்ற 11-ம் வகுப்பு மாணவர் திடீரென ஆற்றில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் மாதவன் (20) என்பவர் லோகேஸ்வரனை காப்பாற்ற சென்றார். எதிர்பாராதவிதமாக மாதவனும் தண்ணீரில் மூழ்கினார். இவரை காப்பாற்ற முயன்ற அவருடைய சகோதரி மாளவிகாவும்(20) தண்ணீரில் மூழ்கினார். 

2 பேரின் உடல்கள் மீட்பு

இதை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் படகு மூலம் சென்று ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடினர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு லோகேஸ்வரன், மாளவிகா ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கதறி அழுத உறவினர்கள்

இதை பார்த்து அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதனிடையே கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் 2 படகுகள் மூலம் மாதவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10 மணி வரை வரை தேடியும் மாதவனை மீட்க முடியவில்லை. தென்பெண்ணையாற்றில் நூற்றுக்கணக்கானோர் திரணடதால் பரபரப்பாக காணப்பட்டது.  

இரட்டையர்கள்

ஆற்றில் மூழ்கிய நாகராஜ் மகன் மாதவனும், மகள் மாளவிகாவும் இரட்டையர்கள் ஆவர். பலியான மாளவிகா பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். மாதவன் பி.எஸ்சி. படித்து முடித்து விட்டு அரசு வேலைக்கான தேர்வுக்கு படித்து வந்தார். நாகராஜ் நெல்லிக்குப்பம் நகர தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பள்ளி மாணவர் உள்பட 2 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
------------------------

மேலும் செய்திகள்