வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பம்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளான நேற்று வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமில் 9 ஆயிரத்து 962 விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வரும் ஜனவரி மாதம் 1-ந்தேதி 18 வயது பூர்த்தியடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நேற்று முன்தினமும், நேற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
14 ஆயிரத்து 230 பேர்
இதேபோல் வரும் 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதியும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. நேற்று 2-வது நாளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1058 இடங்களில் 2,512 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 9,962 பேர் புதிதாக பெயர் சேர்த்தலுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதேபோல் பெயர் நீக்கத்திற்காக 1,376 பேரும், வாக்காளர் பட்டியல் பதிவுகளில் திருத்தம் செய்ய 1,446 பேரும், ஒரே தொகுதியில் புதிய குடியிருப்புக்கான முகவரி மாற்றம் செய்வதற்காக 1,446 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 230 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் புதிதாக பெயர் சேர்த்தலுக்காக 1,840 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.