கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு
கடமலைக்குண்டுவில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் பாலன். இவர், அதே பகுதியில் பேன்சி பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவருடைய கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பாலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஆனால் அந்த வாலிபர் முகத்தில் கண்களை தவிர மற்ற பகுதிகளை துணியால் மூடியிருந்ததால் யார் என அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும் அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி வாலிபா் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு கடமலைக்குண்டு சங்கம்பட்டி தெருவை சேர்ந்த தவமணி என்பவருடைய வீட்டு முன்பு நிறுத்தியிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அதே தெருவில் மற்றொரு வீட்டில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு உரிமையாளர் வீட்டிற்கு வெளியே வந்ததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.