புதர்கள் ஆக்கிரமிப்பு
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு செல்லும் சாலையோரத்தில் ஏராளமான புதர் செடிகள் ஆக்கிரமித்து அடர்ந்து வளர்ந்து உள்ளது. அதற்குள் காட்டெருமை மற்றும் காட்டுப்பன்றிகள் நின்று கொண்டிருப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.
பாலன், கோத்தகிரி.
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி நந்தனர் காலனி, மகாலிங்கபுரம் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இதனால், அதிகாலை நடைபயிற்சி செய்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வயதானவர்கள் வெளியே நடமாடுவதற்கு அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு என அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.
அப்துல், பொள்ளாச்சி.
போக்குவரத்துக்கு இடையூறு
பொள்ளாச்சியில் வடக்கிபாளையம் ரோடு, ஆனைமலை ரோடு ஆகிய இடங்களில் ஆங்காங்கே லாரிகள் நீண்ட நேரம் நிறுத்தப் படுகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
வேல்முருகன், பொள்ளாச்சி.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது
கோவை மாநகராட்சி 94-வது வார்டு குறிச்சி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தம் பின்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளி யிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
இப்ராகீம், குறிச்சி.
சாலையை கடக்க வசதி
கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் தினமும் ஏராளமானோர் காத்து நிற்கிறார்கள். ஆனால் இங்கு சாலையை கடக்க சிக்னல் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்தப்பகுதியில் சாலையை கடக்க வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பாண்டுரங்கன், காமாட்சிபுரம்.
தெருவிளக்குகள் ஒளிருமா?
கோவை சுந்தராபுரம் ஜி.கே.ஸ்குவார் பகுதியில் தெருவிளக்குகள் கடந்த 6 மாதங்களாக ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதாகி உள்ள தெரு விளக்குகளை சரிசெய்து அவற்றை ஒளிர செய்ய வேண்டும்.
பாலன், சுந்தராபுரம்.
சேறும் சகதியுமான சாலை
கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட நெடுகுளாவில் இருந்து கேர்கம்பை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளதால் சாலையில் மண் நிறைந்து சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சாலையில் கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும்.
பிரஷ்னேவ், நெடுகுளா.
மீன் கழிவுகளால் அவதி
கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். அவர்களிடம் இருந்து சிலர் மீன்களை வாங்கி அவற்றை வெட்டி சுத்தம் செய்துகொடுக்கிறார்கள். அந்த மீன் கழிவுகள் அனைத்தும் லாரி பேட்டை பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்பால், கோவை.
விபத்தை ஏற்படுத்தும் ரோடு
கோவையை அடுத்த கோவைப்புதூரில் பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்தும் பல இடங்களில் சாலை அமைக்கவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் விபத்தை ஏற்படுத்தும் சாலையாக மாறிவிட்டது. எனவே பெரிய அளவில் விபத்துகள் நடப்பதற்கு முன்பு இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
முருகானந்தம், கோவைப்புதூர்.
இருக்கை வசதி இல்லை
கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் காத்திருக்க நிழற்குடை வசதி உள்ளது. ஆனால் அங்கு இருக்கை வசதி இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இங்கு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.
குமார், கோவை.
ஒளிராத மின்விளக்கு
கோவை மத்திய சிறை அருகே உள்ள ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகே உள்ள மின்விளக்கு ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருட்டாக இருக்கிறது. மேலும் அங்கு வேகத்தடையும் இருப்பதால் அது தெரியாமல், இருசக்கர வாகனங் களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்விளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
ராஜா, கோவை.