முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு இரட்டை நிலைப்பாடு

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும், அணையை உடைப்போம் என்று சொன்னால், கேரளாவுக்கு செல்லும் பாதைகளை மறிப்போம் என்றும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் கூறினார்.

Update: 2021-11-14 15:52 GMT
தேனி: 


நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
முல்லைப்பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக மத்திய மற்றும் தமிழக அரசை கண்டித்தும் தேனி பங்களாமேட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை என்பது வெறும் செங்கலும், சாந்தும், சிமெண்டும் அல்ல. எங்களின் ரத்தமும், சதையும் அதில் இருக்கிறது. மாநில எல்லைப்பிரிப்பில் தான் இடுக்கி மாவட்டம் கேரளாவுடன் சென்று விட்டது.
அது நமது முன்னோர்கள் செய்த பெரும் பிழை. முகமது அலி ஜின்னா போன்று காமராஜரும், முத்துராமலிங்கத்தேவரும் இருந்து இருந்தால் தமிழ் தேசிய குடியரசு என்றோ மலர்ந்து இருக்கும். தனிநாட்டுக்காக ஜின்னா கூறியது போல் ஆயிரம் காரணம் நமக்கும் இருந்தது. அதை அன்றே கேட்டிருந்தால், தமிழ் தேசிய குடியரசு மலர்ந்து 75 ஆண்டுகள் ஆகி இருக்கும்.

 இரட்டை நிலைப்பாடு
இடுக்கியை கேரளாவுடன் சேர்க்க காமராஜர், உடனே ஒத்துக்கொள்ளவில்லை. நேருவின் செயலாளர் கிருஷ்ணன்மேனன் நேருவிடம் கூறி காமராஜரை சம்மதிக்க வைத்தார். 
இந்த அணையை பாதுகாக்கும் உரிமை தமிழகத்திடம் இருந்தது. அதை எம்.ஜி.ஆர். தாரை வார்த்து விட்டார். 142 அடியாக தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தும், அணையில் இருந்து கேரள மந்திரிகள் தண்ணீர் திறந்து விட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சப்பைக்கட்டு கட்டுகிறார்.
கேரளாவில் நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்ட சிலர் அணையை உடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அதுகுறித்து சட்டசபையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசும்போது, அணை உறுதியாக இருக்கிறது என்றும், தேவையற்ற இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் புகழ்பெற்ற நடிகர்கள் என்றும் பார்க்காமல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். ஆனால், அணை பாதுகாப்பற்று இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தாக்கல் செய்கிறது. அணை விவகாரத்தில் கேரள அரசு இரண்டு முடிவுகளை எடுக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டை கேரள அரசு கைவிட வேண்டும்.

அணுக்கழிவு
அணை பலவீனமாக இருப்பதாக கருதினால், தமிழகமும், கேரளாவும் அணைக்கு உள்ளேயே இன்னொரு அணை கட்டுவோம். தமிழகம் பாதி, கேரளா பாதி நிதியுடன் அணை கட்டுவோம். 
இப்போது இருக்கும் அணை பழமையாகி எப்போது இடிகிறதோ அப்போது இடியட்டும். அதுவரை இப்போது இருக்கும் அணை அப்படியே இருக்கட்டும். ஆனால், நமக்கு ஒரு அரசு இருக்கிறது. அது எதையும் கண்டுகொள்வது இல்லை.
 அணுக்கழிவை கூடங்குளம் அணுஉலை இருக்கும் இடத்திலேயே புதைக்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டை ஆள்வது மு.க.ஸ்டாலினா? கவர்னரா? என்றே தெரியவில்லை.
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள சில மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு அனுமதி கொடுக்காமல், 40 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது. ஆனால், தமிழகத்தில் மலைகளை உடைத்து மலைமணலாக கேரளாவுக்கு கொண்டு போகிறார்கள்.

மாநிலத்துக்கு மாநிலம்...
கம்யூனிஸ்டு கட்சி உலக கட்சி. உலக பாட்டாளிகளுக்கான கட்சி. ஆனால், தமிழக பாட்டாளிகளுக்கு கேரளாவில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுக்கிறது. தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்றால் அது நாங்கள் தான்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் திட்டம். மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு முல்லைப்பெரியாறு அணைக்காக பா.ஜ.க. போராட்டம் நடத்தியது. அணுக்கழிவை கூடங்குளத்திலேயே புதைக்கலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்தும் தமிழகத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்துவார்களா?

 பாதைகளை மறிப்போம்
முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம் என்று இனி கேரளாவில் யாரும் சொல்லக்கூடாது. நாங்கள் இருக்கும் வரை அணையை உடைக்க விடமாட்டோம். அணைக்கு எதிராக இனியும் பேசினால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் மறிப்போம். 
உணவுப் பொருட்கள் எதையும் கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மதவாதத்துக்கு எதிரான அரசு என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க., மதவாதத்துக்கு எதிராக போராடிய பழனிபாபா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தாயக கட்சியின் நிறுவன தலைவர் செந்தில்மள்ளர், தமிழ்த்தேசியக் கட்சி நிறுவன தலைவர் தமிழ்நேசன், மருது மக்கள் இயக்க தலைவர் முத்துப்பாண்டியன், திரைப்பட இயக்குனர் களஞ்சியம், தமிழர் தன்னுரிமைக் கட்சி தலைவர் வியன்னரசு, மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்