இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரை வழங்கினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனருமான டாக்டர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை விவரம் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விவரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் டி.மோகன் விரிவாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன் கூறியதாவது:-
அறிவுரை
பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்படும் படிவம்- 6, 7, 8 மற்றும் 8 ஏ ஆகிய படிவங்கள், இரட்டை பதிவு உள்ள இனங்கள் ஆகியவற்றின் மீது உரிய கள விசாரணை மேற்கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும். 18 முதல் 19 வயது வரையுள்ள இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். மாவட்ட எல்லையில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரட்டை பதிவுகள் இருந்தால் அவை கண்டறியப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் இறந்தவர்களின் பெயர்களை கண்டறிந்து அவற்றையும் உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், கோட்டாட்சியர்கள் சாய்வர்தினி, அரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.