குடியிருப்புகளில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் பாதிப்பு

மழை ஓய்ந்தும் விழுப்புரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-11-14 15:20 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது. அதுபோல் கிராமப்புறங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் வீணாகியது.
விழுப்புரம் நகரை பொறுத்தவரை தாமரைக்குளம், சித்தேரிக்கரை, பாண்டியன் நகர், சுதாகர் நகர், மணிநகர், கம்பன் நகர், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், கணபதி நகர், ஆசிரியர் நகர், கணேஷ் நகர், கே.கே.சாலை அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. 

பொதுமக்கள் பாதிப்பு

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை ஓய்ந்து சூரியன் தலைகாட்ட தொடங்கியுள்ளபோதிலும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வெளியேறிச்செல்ல வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் அவை அப்படியே குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்தினரும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என நகர மக்கள் பலரும் குற்றம்சாட்டினர்.
இதனால் மழை ஓய்ந்த பிறகும் இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாமல் குடியிருப்புகளை சுற்றிலும் சூழ்ந்த நிலையிலேயே உள்ளது. குறிப்பாக விழுப்புரம் கம்பன் நகர், சீனிவாசா நகர், திருநகர், லட்சுமி நகர், தேவநாதசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் வடியாமல் குளம்போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் மற்றும் வேலைக்கு செல்லவும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி தேங்கியுள்ள தண்ணீரில் சிரமப்பட்டு நடந்து வரும் நிலை உள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்