வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி

நாகூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-11-14 15:19 GMT
நாகூர்:
நாகூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது
நாகை மாவட்டம் மஞ்சகொல்லை மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் இத்ரீஸ்.இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரெஜீனாபானு (வயது 42). இவர்களுக்கு சமீனாஆப்ரீன் (18), ஆயிஷாஷப்ரீன் (16), சுைஹலா(12) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். ரெஜீனா பானு தனது மகள்கள் மற்றும் தயார் ஜெகபர்நாச்சியார்(70), அண்ணன் நசீர், உறவினர் மற்றொரு ஜெகபர்நாச்சியார்(65) ஆகியோருடன்  நாகூர் செய்யது பள்ளி தெரு முதலாவது சாலையில் வசித்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு  ரெஜீனாபானு, தாயார் ஜெகபர்நாச்சியார் மற்றும் உறவினர் ஜெகபர்நாச்சியார் ஆகியோர் சமையல் அறையில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் சமையல் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. 
இடிபாடுகளில் சிக்கி பெண் சாவு
இந்த இடிபாடுகளில் ரெஜீனாபானு, ஜெகபர்நாச்சியார் மற்றொரு ஜெகபர்நாச்சியார் ஆகியோர் சிக்கி கொண்டனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கி கொண்ட 3 பேரை மீட்க முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீணையப்பு துறையினர், நாகூர்  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ரெஜீனாபானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் ஜெகபர்நாச்சியார், மற்றொரு ஜெகபர்நாச்சியார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
கலெக்டர் ஆறுதல்
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், தாசில்தார் தனபால் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து நாகை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரையும் கலெக்டர் அருண் தம்புராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக  பெய்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்