நத்தம் அருகே தொடர் மழையால் கால்நடைகளுக்கு உணவாகும் திராட்சை பழங்கள் விவசாயிகள் வேதனை
நத்தம் அருகே தொடர்மழையால் திராட்சை பழங்களை பறிக்காமல் விட்டதால் அவை கால்நடைகளுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.
செந்துறை:
நத்தம் அருகே பட்டணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பன்னீர் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. சமீபத்தில் இந்த பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக திராட்சை பழங்கள் வெடித்து அழுகி கீழே கொட்டுகின்றன. வழக்கமாக திராட்சை சாகுபடியின்போது ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இதற்காக விவசாயிகள் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து உரம், பூச்சி மருந்து தெளித்து சாகுபடி செய்து இருந்தனர். இந்தநிலையில் திராட்சை பழங்கள் மழையால் அழிவுக்கு உள்ளாகியதால் அவர்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அறுவடைக்கு வந்த வியாபாரிகள் பழங்களின் தரத்தை பார்த்து வாங்காமல் திரும்பி செல்கின்றனர். இதனால் திராட்சை விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே விவசாயிகள் திராட்சை பழங்களை மாடுகளுக்கு தீவனமாக வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட திராட்சை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது திராட்சை விவசாயத்திற்காக வாங்கப்பட்ட கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.