இளம்பெண் தற்கொலை வழக்கில் கோர்ட்டு ஊழியருக்கு ஆயுள் தண்டனை
திருவண்ணாமலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கோர்ட்டு ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கோர்ட்டு ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
காதல்
மதுரை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 34). இவர் திருவண்ணாமலை கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் கணேசன் மகள் வினோதா (27). இவர் திருவண்ணாமலை கோர்ட்டில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதையடுத்து வினோதா டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் சென்னையில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சேர்ந்தார். இருப்பினும் இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்து வந்தது.
சுந்தர்ராஜனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி திருவண்ணாமலை வானவில் நகரில் சுந்தர்ராஜன் தங்கிருந்த வீட்டிற்கு வினோதா வந்திருந்தார்.
தற்கொலை
அப்போது வினோதா வேறு சாதி என கூறி அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என சுந்தர்ராஜன் மறுத்துள்ளார்.
பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த வினோதா சுந்தர்ராஜன் தங்கிருந்த வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் சாதி வன்கொமை பிரிவுகளில் சுந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு கூறினார்.
அதில் காதலியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு ஊழியர் சுந்தர்ராஜனை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.