முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணாபுரம் அணை நீர் 10-வது முறையாக திறப்பு - கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணாபுரம் அணை நீர் 10-வது முறையாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரித்தனர்.

Update: 2021-11-14 07:59 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார் வேட்டி நகரம் மண்டலம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது.

இந்த அணையில் இருந்து 9-வது முறையாக நேற்று முன்தினம் இரவு 1,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பல தரைப்பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டன. இந்த நிலையில் கிருஷ்ணாபுரம் அணை 24 மணி நேரத்தில் மீண்டும் தனது கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அணையின் கதவுகளை திறந்து தண்ணீரை திறந்து விட முடிவு செய்தனர்.

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களின் உத்தரவின் பேரில், திருத்தணி ஆர்.டி.ஓ.சத்யா அவர்களின் ஆலோசனையின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் இரவு நேரத்தில் யாரும் தரை பாலத்தை கடக்க வேண்டாம் என்று எச்சரித்தனர். மேலும் தரைப்பாலங்களின் இருபுறமும் வருவாய் துறையினரும், போலீசாரும் பொதுமக்களை தரை பாலங்களில் கடக்க விடாமல் கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 10-வது முறையாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் செய்திகள்