பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் தேங்கிய மழைநீரில் படகில் சென்று போலீஸ் கமிஷனர் ஆய்வு
பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் தேங்கிய மழைநீரில் படகில் சென்று போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார்.
திரு.வி.க. நகர்,
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பெரவள்ளூர் போலீஸ் நிலையத்துக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்தது. மழை நின்று 2 நாட்களாகியும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று பெரவள்ளூர் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியை ரப்பர் படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் போலீஸ் குடியிருப்பில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும்போது, “சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் டிரோன்கள் மூலம் உணவு, மருந்து ெபாருட்கள் வழங்கப்படுவதுடன், டிரோன்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தண்ணீரில் செல்லக்கூடிய சிறிய அளவிலான தானியங்கி படகு மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக” கூறினார்.