ஆட்டோ-டிராக்டர் மோதல்: பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உடல்நசுங்கி சாவு
யாதகிரி டவுனில் நடந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உடல்நசுங்கி இறந்த கோர சம்பவம் நடந்து உள்ளது.
யாதகிரி:
3 பேர் சாவு
யாதகிரி டவுன் முத்னால் கிராசில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு ஆட்டோ சென்றது. அந்த ஆட்டோவில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில் எதிரே வந்த டிராக்டரும், ஆட்டோவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு, நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது. இதில் ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் யாதகிரி போக்குவரத்து போலீசார் அங்கு சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை உள்பட 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கவனக்குறைவாக ஓட்டியதால்....
விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஆட்டோ டிரைவர் லட்சுமண், பச்சிளம் குழந்தை, அந்த குழந்தையின் தாத்தா ஜெயராஜ் என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த மற்ற 6 பேரின் பெயர், விவரங்களும் உடனடியாக தெரியவில்லை. டிராக்டரை அதன் டிரைவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த விபத்து குறித்து யாதகிரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் டிராக்டர் டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இறந்த சம்பவம் யாதகிரியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.