முழு கொள்ளளவை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது

முழு கொள்ளளவை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது

Update: 2021-11-13 19:49 GMT
மேட்டூர், நவ.14-
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி நேற்று இரவு நிரம்பியது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினாலும் மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது.
அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 9-ந் தேதி அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. 
உபரிநீர் திறப்பது நிறுத்தம்
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரிநீரை திறந்து விட்டனர். முதலில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்பட்டது. கடந்த 2 நாட்களாக அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் காலை 10 மணி முதல் முழுமையாக உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 150 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இரவில் நிரம்பியது
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரத்து 812 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 20 கனஅடியாகவும், பின்னர் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
இதனிடையே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு வந்தது. நேற்று காலையில் 119 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 119.40 அடியாகவும், பின்னர் இரவு 8 மணி அளவில் நீர்மட்டம் 119.70 அடியாகவும் உயர்ந்தது. மேலும் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் இரவு 11.35 மணி அளவில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டது. அதாவது, இரவில் அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த உபரிநீர் முழுவதும் அணை நீர்மின் நிலையம, சுரங்க நீர்மின்நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
41-வது முறையாக...
மேட்டூர் அணை கட்டப்பட்டு 87 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று 41-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்