குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா

மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு குரு பெயர்ச்சியை தொடர்ந்து குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-13 19:49 GMT
சோழவந்தான், 
மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு குரு பெயர்ச்சியை தொடர்ந்து குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
குருபகவான்
 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேவைகை ஆறு கரையில் குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திரரத வல்லபபெருமாள் கோவில் முன்பு குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலித்து வருகிறார். 
இதுவரை மகர ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று மாலை 6:10 மணி அளவில் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. நேற்று மதியம் வரை லட்சார்ச் சனை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு பரிகார மகா யாக பூஜை நடந்தது. 
யாக பூஜை
இதில் ரெங்கநாத பட்டர், சடகோபப்பட்டர், ஸ்ரீதர் பட்டர், பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜை நடத்தினர். நேற்று மாலை 6.10 மணி அளவில் அர்ச்சகர்கள் புனித நீர் குடங் களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.  இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை முன்னிலையில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். குருபகவான் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தபின்னர் பூஜை நடைபெற்றது. 
இதில் மாவட்ட நீதிபதி ரோகினி,  அமைச்சர் மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி, கோட்டாட்சியர் சுகிபிரேமலா, சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், உசிலம்பட்டி அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குறைந்த அளவில் பக்தர்கள் குருவித்துறை கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். 
தடுப்புவேலி
கொரோனா தொற்றுநோய் காரணமாக அரசு உத்தரவின் படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமையில் மருத்துவ குழு, வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலைய துறையினர் ஆகியோர் போலீசாருடன் 5 இடங்களில் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்களை ஒழுங்குபடுத்தி சமூக இடை வெளி யுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். 
சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார், சோழ வந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஏற்பாடு 
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெண்மணி, செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், கோவில் பணியாளர்கள் வெங்கடேசன், நாகராஜ், மணி ஆகியோர் செய்திருந்தனர். குருவித்துறை ஊராட்சி  தலைவர் ரம்யாநம்பிராஜன் தலைமையில் பணியாளர்கள் அடிக்கடி கிருமிநாசினி தெளித்தனர்.

மேலும் செய்திகள்