ஆபத்தான கட்டிடத்தை பூட்டி வைக்க கலெக்டர் உத்தரவு
அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆபத்தான கட்டிடத்தை பூட்டி வைக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
வேலூர்
அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆபத்தான கட்டிடத்தை பூட்டி வைக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
அப்போது வேலூர் அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாமினை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, அங்குள்ள ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் உள்ள வகுப்பறைக்கு சென்றார். அவ்வாறு செல்லும்போது படிக்கட்டுகளில் மழைநீர் வடிந்து ஓடியது.
அவர் முதல் தளத்துக்கு சென்று பார்த்தபோது கட்டிடத்தின் மேற்பகுதி கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. இதனால் மழைநீர் படிக்கட்டுகளில் வடிந்து கீழே கொட்டியது அவருக்கு தெரியவந்தது.
ஆபத்தான கட்டிடம்
மேலும் அந்தப்பகுதி மிகுந்த ஆபத்தான முறையில் காணப்பட்டது. மாணவர்கள் அதில் ஏறிச்சென்றால் வழுக்கி கீழே விழும் நிலையில் அபாயகரமான நிலையில் கட்டிடம் முழுமையாக கட்டப்படாத வகையில் இருந்தது.
இதைப்பார்த்த கலெக்டர் அந்த படிக்கட்டுகளில் மாணவர்கள் செல்லாத வகையில் கதவு அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கடிதம் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் கலெக்டர் கட்டிடத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு அந்த கட்டிடத்தில் படிக்கும் மாணவர்களை வேறு கட்டிடத்துக்கு மாற்ற தலைமை ஆசிரியைக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த கட்டிடத்தில் மேற்பகுதியை யாரும் பயன்படுத்தாத வகையில் அதை தற்காலிகமாக அதை பூட்டி வைக்கவும் உத்தரவிட்டார். பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.
கோரிக்கை மனு
இதையடுத்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். அலமேலுமங்காபுரம் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் சத்துவாச்சாரியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா? என விசாரணை மேற்கொண்டு தடுப்பூசி போடாதவர்களிடம் தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறினார்.
ஆய்வின்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.