புதிய துறைமுகம் கடற்கரை சாலையில் இரும்பு கேட் அமைக்கும் பணி; மீனவர்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரைக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பிரதான சாலையில் இரும்பு கேட் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

Update: 2021-11-13 17:21 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரைக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பிரதான சாலையில் இரும்பு கேட் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

இரும்பு கேட் அமைக்கும் பணி

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் துறைமுக விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு பிடிக்கப்படும் மீன்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரதான பாதை மூலமாக மீனவர்கள், மீன் வியாபாரிகள் சென்று வருகின்றனர். இந்த பாதையில் மீனவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு செல்ல இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

மீனவர்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு சொந்தமான இந்த பிரதான பாதையினை பாதுகாப்பு கருதி இரும்புகேட் மூலமாக அடைப்பதற்காக நேற்று இந்தப் பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த பிரதான வழிப்பாதையினை இரும்புகேட் கொண்டு அடைக்கும் முடிவினை துறைமுக நிர்வாகம் கைவிட வேண்டும், மீன்வளத்துறையினர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்