திறக்கப்படாத பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதி மூழ்கிய விசைப்படகு
திறக்கப்படாமல் இருந்த பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதிய விசைப்படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்
திறக்கப்படாமல் இருந்த பாம்பன் தூக்குப்பாலத்தில் மோதிய விசைப்படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தூக்குப்பாலத்தில் மோதியது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியிலிருந்து வடக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்வதற்காக நேற்று 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், திறக்கப்படாமல் இருந்த தூக்குப்பாலத்தை கடந்து செல்ல வரிசையாக வந்தன.
அப்போது மண்டபத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு தூக்குப்பாலத்தை கடக்க முயன்ற போது அந்த படகு தூக்குப்பாலத்தின் மீது மோதியது.
கடலில் மூழ்கிய படகு
இதனால் படகின் மேல்பகுதி முழுமையாக உடைந்து நொறுங்கியது.. பின்னர் இந்த படகு தூக்குப்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீது மோதியபடி நின்றது.
கடல் நீரோட்டம் மற்றும் அலையின் வேகத்தால் தென்கடல் பகுதியை நோக்கி இழுத்துச் சென்ற அந்த விசைப்படகு திடீரென கடலில் மூழ்கத்தொடங்கியது. அப்போது படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர்.
4 பேர் மீட்பு
இதை பார்த்த தெற்குவாடி கடற்கரை பகுதி மீனவர்கள் உடனடியாக 2 நாட்டுப்படகில் சென்று, அந்த 4 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து கடலோர போலீசாரும் மற்றும் ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் சம்பவம்
பொதுவாக பெரிய விசைப்படகு மற்றும் கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்கு, துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் ரெயில்வே பணியாளர்களால் தூக்குப்பாலம் திறக்கப்படும். அப்போதுதான், விசைப்படகுகள் மற்றும் கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும், என்பது விதிமுறை.
ஆனால் திறக்கப்படாமல் இருக்கும் தூக்குப்பாலத்தை மண்டபம், பாம்பன், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த விசைப்படகுகள் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்கள் படகுகள் சேதம் அடைவதுடன், தூக்குப்பாலம் மற்றும் பாலத்தின் தூண்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்று கடந்து செல்வதை தடுக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.