எந்த பிரச்சினைக்கும் சட்ட உதவி மையத்தை அணுகலாம்-நீதிபதி பேச்சு

பொதுமக்கள் தங்களின் எந்த பிரச்சினைக்கும் சட்ட உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் நாடினால் சட்டஉதவி மையம் பெற்றுத்தர தயாராக உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் பேசினார்.

Update: 2021-11-13 16:29 GMT
ராமநாதபுரம்
பொதுமக்கள் தங்களின் எந்த பிரச்சினைக்கும் சட்ட உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் நாடினால் சட்டஉதவி மையம் பெற்றுத்தர தயாராக உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் பேசினார்.
விழிப்புணர்வு முகாம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட நீதிபதியும்,  சட்டபணிகள் ஆணைக்குழுவினர் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். நீதிபதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்-கோர்ட்டு நீதிபதி கதிரவன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நீதிபதி சண்முகசுந்தரம் பேசியதாவது:- 
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சட்ட உதவி மைய பணிகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்டோபர் 2-ந் தேதி முதல் இதுவரை சட்ட தன்னார்வலர்களை வைத்து கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று சட்ட பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.
தீர்த்து வைக்கப்படும்
சட்ட உதவி அளித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமரச தீர்வு மையங்கள் நடத்துதல், அரசின் நிவாரணம் பெற்று தருவது போன்றவை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முக்கிய பணிகளாகும். அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதும் இதன் முக்கிய பணியாகும்.  பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்ட பணிகள் ஆணைக்குழுவை அணுகினால் சட்டப்படி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் பேசினார். 
நிகழ்ச்சியில் சப்-கோர்ட்டு நீதிபதிகள் சிவாஜி செல்லையா, நசீர்அலி, கமுதி மாஜிஸ்திரேட்டுமுத்துலட்சுமி, ராமநாதபுரம் முன்சீப் நீதிபதி முல்லை, பார் கவுன்சில் தலைவர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, அரசுவக்கீல் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கியதோடு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்