ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மிதந்த 2 உடல்கள்

ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி உள்பட 2 பேரின் உடல்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-11-13 16:22 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி உள்பட 2 பேரின் உடல்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
ஆற்றில் மிதந்த உடல்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்திற்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடலும், 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடலும் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆற்றில் மிதந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்த மூதாட்டி தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த குபேந்திரன் மனைவி ஜெயக்கொடி (வயது 69) என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மாயமாகிவிட்டதாகவும், கண்டுபிடித்து தருமாறும் அவரது உறவினர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் ஆற்றில் இறந்து கிடந்த மூதாட்டி ஜெயக்கொடி என்பதை உறுதி செய்தனர். 
பரபரப்பு
ஆனால் மற்றொருவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. மேலும் 2 பேரும் ஆற்றில் தவறிவிழுந்து இறந்துபோனார்களா? அல்லது ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைகை ஆற்றில் 2 உடல்கள் மிதந்த சம்பவம் கரட்டுப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்