நாமக்கல் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த மேலும் 2 பேர் கைது
நாமக்கல் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த மேலும் 2 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). லாரி டிரைவர். இவர் கடந்த 11-ந் தேதி அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல்- சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் லாரிக்குள் ஏறி டிரைவர் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.24 ஆயிரத்தை பறித்தனர்.
பின்னர் அதே லாரியில் வந்த அவர்களை முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் இருந்த 2 பேர் தப்பியோடினர். 2 பேர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டனர். அவர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதில் காயம் அடைந்த புதன்சந்தை பகுதியை சேர்ந்த சூர்யா (26), கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் புதன்சந்தை பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன், கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதேபோல் சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சூர்யா, அருள்குமார் (24) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.