அமைப்பு சாரா தொழிலாளர்கள் விவரங்களை பதிவேற்ற முகாம்
அமைப்பு சாரா தொழிலாளர்கள் விவரங்களை பதிவேற்ற முகாம்
கோவை
தொழிலாளர் நல அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் விவரங்கள் பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது
அமைப்புசாரா தொழிலாளர்கள்
மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் மூலம், பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட eSHRAM மற்றும் SHRAM SUVIDHA வலைத் தளத்தில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து, அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி பணி, நகர ஊரக வளர்ச்சி பணி, நடைபாதை வியாபாரிகள்,
கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூக ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர்கள், செங்கல்சூளை தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை வலைத்தளத்தில் பதிவேற்றும் வகையில் முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பதிவு செய்யலாம்
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம், ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்திலும் தினமும் முகாம் நடைபெறுவதால் அனைத்து தொழிலாளர்களும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.