கோபால்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதி

கோபால்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டிடம் உள்ளது. மேலும் வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.

Update: 2021-11-13 12:11 GMT
கோபால்பட்டி:
கோபால்பட்டியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி மிகவும் பழமையானதாகும். இப்பள்ளியில் கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 175 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள 5 வகுப்பறை கட்டிடங்களில் 2 வகுப்பறை கட்டிடங்கள் பழைய ஓட்டு கட்டிடங்களாக உள்ளது. இதில் பல ஓடுகள் சேதமடைந்துள்ளதால் லேசான மழை பெய்தாலும் மழைநீர் வகுப்பறையில் ஓழுகுகிறது. இதனால் மாணவர்கள் அவதியடைகின்றனர். மற்றொரு வகுப்பறை கட்டிடத்தில் மேலே உள்ள கான்கிரீட் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது. இன்னொரு வகுப்பறை கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் பயன்படுத்தப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த பள்ளியில் கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. எனவே இந்த அரசு தொடக்கப்பள்ளியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்