சென்னை மாநகராட்சி பகுதியில் கனமழையால் தேங்கிய மழைநீர் 539 மின் மோட்டார் மூலம் வெளியேற்றம் - கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேரில் ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதியில் கனமழையால் தேங்கிய மழைநீர் 539 மின் மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருவதை கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-11-13 05:23 GMT
சென்னை,

சென்னை தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனி பகுதிகளில் மழையால் தேங்கிய மழைநீரை அதிக குதிரைத்திறன் கொண்ட பம்புகள் மூலம் வெளியேற்றப்படும் பணியை அரசு முதன்மை செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கணேசபுரம் 3-வது தெருவில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய மண்டல அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், அந்த பகுதியில் கழிவுநீர் நிரம்பி வெளியேறுவதை தடுக்கும் வகையில் சூப்பர் சக்கர் எந்திரங்களை கொண்டு கழிவுநீரை உடனடியாக அகற்ற சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய என்ஜினீயர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சியில் கனமழையால் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அதிக குதிரைத்திறன் கொண்ட 539 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் தேக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக 24 மின்மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்