தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி காவலாளி பலி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 81). இவர் மந்தவெளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்தார். நேற்று காலை சக்திவேல், மந்தவெளி பஸ் பணிமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பாதையில் இருந்த மின்பெட்டியை சுற்றி மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல், தேங்கி இருந்த மழை நீரில் சக்திவேல் நடந்து சென்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அபிராமபுரம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.