வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபோது தாய் கண்முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 வயது சிறுவன்

ஒடுகத்தூர் அருகே தாயுடன் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபோது 5 வயது சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான். அவனைதேடும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-11-13 04:49 GMT
அணைக்கட்டு
 
ஒடுகத்தூர் அருகே தாயுடன் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபோது 5 வயது சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான். அவனைதேடும் பணி நடைபெற்று வருகிறது.

வேடிக்கை பார்க்க சென்றார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த கத்தாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ரித்திக் ரோஷன் (வயது 5), யுவன் சி ஆதித்யா (3) என 2 மகன்கள் உண்டு. சுதாகர் கூலி வேலை செய்து வருகிறார். ஒடுகத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் உத்திர காவிரி ஆறு மற்றும் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நேற்று பவித்ரா தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு உத்திரகாவிரி ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது யுவன் சி ஆதித்யாவை இடுப்பில் வைத்துக்கொண்டு, ரித்திக்ரோஷனை கையில் பிடித்தபடி ஆற்றங்கரையில் நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கோண்டிருந்தார்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான்

அப்போது திடீரென ரித்திக் ரோஷன் பவித்ராவின் கையில் இருந்து விலகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த பவித்ரா கூச்சலிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு வெள்ளம் இழுத்துச் சென்றது.

இது குறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் சென்று ஆற்று படுகை முழுவதும் தேடிப்பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. உத்திரை காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடுவதால் சிறுவனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.‌ வேப்பங்குப்பம் போலீசாரும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்