பசவராஜ் பொம்மையிடம் கவலைப்பட வேண்டாம் என மோடி கூறியது ஏன்? - சித்தராமையா கேள்வி
பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் பசவராஜ் பொம்மையிடம் கவலைப்பட வேண்டாம் என்று பிரதமர் கூறியது ஏன்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தன்னிச்சையான முடிவு
பிட்காயின் முறைகேடு குறித்து மத்திய-மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் பசவராஜ் பொம்மை முன்பு போலீஸ் மந்திரியாகவும் இருந்தார். உங்கள் மீதான பிட்காயின் முறைகேடு பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பசவராஜ் பொம்மையிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். அப்படி என்றால் விசாரணையை கைவிடுங்கள் என்று கூறுவது போல் ஆகாதா?.
புகார் குறித்து விசாரணை நடத்தி உங்கள் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று கூற வேண்டிய பிரதமர், கவலைப்பட வேண்டாம் என கூறுவது சரியா?. குற்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க போலீசார், கோர்ட்டுகள் வேண்டாமா?. பிரதமரின் தன்னிச்சையான முடிவு இறுதியானதா?. பிட்காயின் முறைகேட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தொடர்பு உள்ளதோ, இல்லையோ எங்களுக்கு தெரியாது. இதில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்களின் பெயரும் உள்ளதாக கூறி எங்களின் வாயை மூட பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டாம். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசே உள்ளது. அதனால் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை பின்னர் பார்த்துக்கொள்வோம்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.