மழைநீரில் மூழ்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
மழைநீரில் மூழ்கியதால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தா.பழூர்:
மழைநீரில் மூழ்கின
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. டெல்டா பாசன பகுதியாக விளங்கும் சாத்தாம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, வாழைகுறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழூர், இடங்கண்ணி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் ஆகிய ஊராட்சிகளில் சம்பா நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நெற்பயிர்கள் பெருமளவில் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக கோடாலிகருப்பூர், உதயநத்தம், இடங்கண்ணி உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் உடனடியாக வடிவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் அழுகும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உரம் கிடைக்கவில்லை
மேலும் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்தால், இந்த ஆண்டு நெல் உற்பத்தி முற்றிலும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிக அளவு வெள்ளநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை காப்பதற்கு தேவையான ரசாயன உரங்களையும் தேவைப்படும் உயிர் உரங்களையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு யூரியா உரம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.
கோரிக்கை
இந்த சம்பா பருவத்தில் தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நெற்பயிரை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்க யூரியாவின் தேவை தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது. எனவே உரிய அதிகாரிகள் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும், யூரியா வாங்கும்போது கூடுதலாக தேவையில்லாத சில ரசாயன உரங்களை வாங்க விவசாயிகள் வற்புறுத்தப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.