மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 வீடுகள் இடிந்தன

மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.

Update: 2021-11-12 19:52 GMT
பெரம்பலூர்:

வீடுகள் இடிந்தன
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரம்பலூர் தாலுகா சத்திரமனை கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதியும், லாடபுரம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த அஞ்சலை, ரத்தினசாமி ஆகியோருடைய கூரை வீடுகளின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல் மழையால் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த மகாமுனியின் கூரை வீடு முழுவதும் இடிந்து விழுந்தது.
குன்னம் தாலுகா வடக்கு காடூரை சேர்ந்த அஞ்சலை, தெற்கு காடூரை சேர்ந்த பானுமதி ஆகியோரது கூரை வீடுகளின் ஒரு பகுதியும், கார்குடியை சேர்ந்த அரியபுத்திரனின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்து சேதமடைந்தது. வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகாம்களில் தங்கவைப்பு
மேலும் ஆலத்தூர் தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் தங்கியிருந்த 17 குடும்பங்களை சேர்ந்த 23 ஆண்கள், 23 பெண்கள், 25 குழந்தைகள் என மொத்தம் 71 பேரை அரசு அதிகாரிகள் கீழமாத்தூர் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களுக்கு பிறகு லேசாக வெயில் அடித்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாடாலூர்-3, அகரம்சீகூர்-10, லெப்பைக்குடிக்காடு-4, புதுவேட்டக்குடி-4, பெரம்பலூர்-3, எறையூர்-2, கிருஷ்ணாபுரம்-6, தழுதாழை-13, வி.களத்தூர்-4, வேப்பந்தட்டை-8.

மேலும் செய்திகள்